Thursday, March 12, 2009

வீ டி ழ ந் து . . ,

அந்த செய்தி என்னை பலமாகத் தாக்கியது. என் வீட்டை இடிக்கப் போகிறார்கள்.
வீட்டின் முன்புறமுள்ள சாலையை அகலபடுத்துவதற்காக , என் வீட்டையும் இடிக்கப் போகிறார்களாம். வெகு காலமாய் குடியிருந்தாலும் அவ்விடம் அரசுக்குச்சொந்தமான "புறம்போக்கு நிலம்" , எனவே எவ்வித இழப்பீடும் கிடையாதாம்.
யாருக்கு வேண்டும் இவர்களின் "இழப்பீடு"?. நான் பத்து மாதம் இருந்தது தாயின் கருவறை; பிறந்து இருபது வருடங்கள் இருந்தது என் வீடு.
கருவறையில் இருந்த காலங்கள் நினைவில் இல்லாதிருக்கலாம். ஆனால் என் வீட்டில் இருந்த காலங்கள்?
இன்று நான் என் குடும்பத்துடன் [ தாய், தந்தையுடன்] சென்னையில், வாடகை வீட்டில் இருக்கிறேன். ஆனால், என் மனதில் எங்களின் வீடும், மழைகாலத்தில் ஓட்டிலிருந்து கிளம்பும் ஈர மணமும் இன்றும் நிறைந்திருக்கின்றது.
வீடு எனப்படும் அந்த ஓர் அறை, முதலில் தென்னங்கீற்றால் வேயப்பட்ட ஒரு குடிலாகத்தான் இருந்தது. எதிர் வீட்டில் வளர்ந்து பெரிதாய் ஓங்கி நின்ற வேப்ப மரம், என் வீட்டிற்கு அளவில்லா குளுமையை வாரிவழங்கியிருந்தது.
பிறந்ததிலிருந்து நான் பாட்டி செல்லம். சூழ்ந்திருந்த ஏழ்மை, என்னை சீராட்டுவதைத் தடுக்க இயலவில்லை.
நான் தவழ்ந்து பற்றிய தண்ணீர் பானைகள், பிடித்து எழுந்து நின்ற என் அம்மாவின் தையல் மெஷின், வெளியே எட்டிப்பார்க்கும்போது பற்றிக் கொண்ட கதவின் நிலை, தன் ஓட்டைகளின் வழியே சூரிய ஒளியை காட்டி சிரிக்கச் செய்த கீற்றோலை, என் உடலையும் , மனதையும் குளுமையாய் வைத்திருந்த எதிர் வீட்டு வேப்பமரம். ......., அப்பப்பா, எப்படிச் சொல்வது?
இன்று பட்டணத்துப் பட்டு மெத்தைகளும், குளிர்சாதனப்பெட்டிகளும் தராத மகிழ்ச்சியை, நிம்மதியை, குதூகலத்தை அன்று அந்த ஓலைவேய்ந்த என் குடில் எனக்கு வழங்கியிருந்தது.
அப்பகுதி மக்களுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த சிறுவயதிலும், படிப்பில் சிறந்தவனாக விளங்கிய என் பள்ளிபருவத்திலும் , என் படிப்பிடமாய், ஓய்விடமாய், விளையாட்டு மைதானமாய், மனச்சோர்வுறும் நேரத்தில் அன்னை மடியாய் என்னுள் கலந்திருந்த என் வீடு என் இன்னொரு தாய்.
ஒழுக்கத்தில் கண்டிப்பும், படிக்க ஊக்கமும் தந்து, பண்பினையும், பரிவினையும் ஊட்டி வளர்த்த என் தாய் எனக்கு இன்னொரு வீடு.
படிக்க, உண்ண , உறங்க என எல்லாவற்றிற்கும் பாட்டியின் அருகாமையை தேடும் நான், பணிவானவனாய், பண்பானவனாய், முன்னேறும் வெறியுடையவனாய் வளர்ந்தது என் அம்மாவால்.
ஏழ்மையை எட்டி நிறுத்த, எந்நேரமும் என் வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கும் தையல்மெஷினின் ஓசை. உறங்கும் நேரத்திலும் என் தாயின் கால்கள் தன்னிச்சையாய் ஆடிக்கொண்டிருப்பதை பல சமயங்களில் பார்த்திருக்கிறேன்.
வெம்மை தாக்கும் கோடையில் குளுமை தரும் கீற்றோலை: அதே பரிவுடன் விசிறி விடும் என் அம்மா:
உலுக்கும் குளிர்காலத்தில் மெல்லிய கதகதப்பளிக்கும் கீற்றோலை; மேலும் கதகதப்பளிக்கும் என் அம்மாவின் நூல்சேலை;
வறுமையின் வெம்மை என்னை சுடாதவாறு பரிவு போர்வை போர்த்தியவர்கள் என் அம்மாவும், என் வீடும்;
பள்ளிபருவத்தில், மிகுந்த முயற்சிக்குப்பின் சற்று பணம் சேர்த்து, எங்கள் கூரை வீட்டை ஓட்டு வீடாக மாற்றும்போது, அதன் ஒவ்வொரு செங்கல்லும் நான் தொட்டு எடுத்துக்கொடுத்தது;ஒவ்வொரு ஓடும் நான் தூக்கிக்கொடுத்தது.
என் தாயின் ஒவ்வொரு முயற்சியும் எனக்காக வந்தது; ஒவ்வொரு சேமிப்பும் எனக்காகச் செய்யப்பட்டது.
அந்த வீட்டை இடிக்கப்போகிறார்கள். நினைக்கும் போதே என்னை துக்கம் சூழ்ந்தது. வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தேன்.
திடீரென அம்மா வயிறு மிகவும் வலிப்பதாய் சொன்னார்கள். அருகிலுள்ள மருத்துவமனைக்கு விரைந்தோம். பல்வேறு சோதனைகள் மேற்கொண்டார்கள்.
முடிவில் "கர்ப்பப்பை புற்றுநோய்" என்றார்கள். "பயப்படத்தேவையில்லை. ஆரம்பநிலைதான்! கர்ப்பப்பையை அகற்ற வேண்டும். பின் வேறேதும் அபாயம் இல்லை" என்றார்கள்.
"அந்த செய்தி என்னை பலமாகத் தாக்கியது."
என்னை திரும்பிப் பார்த்தபடி அம்மா டாக்டரிடம் கேட்டார். "என்றைக்கு ஆபரேஷன் செய்யலாம் டாக்டர்?"
" அடுத்த வாரம் வியாழக்கிழமை" டாக்டர் சொன்னார்; அன்றுதான் என் வீட்டையும் இடிக்கப்போகிறார்கள்.

Sunday, March 1, 2009

பி ண [ஜ ன] நா ய க ம்

தலைப்பே எதிர்மறை வார்த்தையாக தந்ததற்கு மன்னிக்கவும்.



என்ன பொருள் இந்த சொல்லுக்கு? மக்கள் பிரதிநிதித்துவம்?

எங்கு இருக்கிறது மக்கள் பிரதிநிதித்துவம்? ஆட்சியிலா? அதிகாரத்திலா?

வெறும் வோட்டளிக்கும் உரிமை மட்டுமே பங்களிப்பாகிவிடுமா?

"மக்கள் ஆட்சியின் உண்மையான பயன் தான் என்ன?

ஏழ்மை விலகிவிட்டதா?, இல்லாமை இல்லாமல் போய்விட்டதா? கல்வி அறிவு பெருகிவிட்டதா? அல்லது இவை அனைத்தும் ஏற்படும் வழிகள்தான் நம் கண்களுக்குத் தட்டுப்பட்டு விட்டதா?



"பொருளாதார வளர்ச்சி, தன்னிறைவு,அன்னியச்செலாவணி கையிருப்பு, பணவீக்கம் குறைவு,வெளிநாட்டு முதலீடு, தகவல்,தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், உலகமயமாக்கள், ..... . .. . .. " மாட்டுச்சாணம்! இவை அனைத்தும் இந்நாட்டில் பட்டினி கிடக்கும் பாமரனுக்கு ஒரு வேளை உணவிடவில்லை.



எதைச் சொல்கிறோம் பொருளாதார வளர்ச்சி என்று? இதோ , பணம் பண்ணும் [திண்ணும்], பத்து சதவீத மேல்தட்டு மக்கள் இன்னும் கொழுத்துக்கொண்டிருப்பதையா? முதலீடு, கட்டமைப்பு, அதிகாரம் இவற்றைக் கைக்கொண்டு, உழைப்பவர்களின் வியர்வை முதல் இரத்தம் வரை உறிஞ்சி பணமாக்கிக் கொண்டிருக்கும் இந்த தொழிலதிபர்களின், அதிகார வர்க்கத்தின் செயல்களை நியாயப்படுத்தவும், பாதுகாப்பளிக்கவுமே பயன்படும் இந்த "ஜனநாயக பழைய பஞ்சாங்கம்.



"வலிவுள்ளதே வாழ தகுதியுள்ளது" என்பது இயற்கையின் நியதிதான். ஆனால் விலங்குகளுக்கு, மனிதனைத்தவிர மற்ற உயிரினங்களுக்கு.



தன் அறிவால் மேம்பட்ட, அதனால் தன் இனத்தைத் தழைத்தோங்கச் செய்த மனித இனத்திலுமா அப்படி?



அந்த மேம்பட்ட அறிவு, தன் இனத்தையே கொள்ளையிடவும், அழித்தொழிக்கவும், அடிமை செய்யவுமே உதவுமெனில்.... எதற்காக? தேவையில்லை.



உழைக்க மறுக்கும், பிறரை ஏவல் செய்து வாழத்துடிக்கும், எல்லா நேரமும் இன்பம் மட்டுமே நுகரத்துடிக்கும் ஒரு கூட்டம் எல்லா காலகட்டத்திலும், எல்லா சமூகத்திலும் வாழ்ந்து வந்திருக்கிறது, வருகின்றது.



பொதுவாழ்க்கை, நிர்வாகம், அரசமைப்பு, தொழிற்துறை, சட்டம், என இக்கூட்டம் பெருகி, ஊடுருவி, செல்லரித்து சமூகம் முழுதும் விரவியிட்ருக்கின்றது.



எளிதில் பணம் பண்ணும் இடமாகிவிட்ட பொதுவாழ்க்கை, அதற்கு இடர் ஏதும் நேராவண்ணம் அதிகாரத்தைக் கைக்கொள்ள நிர்வாகம், இச்செயல்களை நியாயபடுத்தவும், இதுதான் வாழும்முறை, இதுதான் சமூகக்கட்டமைப்பு என்ற மாயத்தோற்றத்தை சட்டப்பூர்வமாக்கவும் தோதாக உருவாக்கப்பட்ட அரசமைப்பு, உழைப்பை, பொறுப்புகளை, கடமைகளை மட்டுமே பிரித்துக்கொடுத்துவிட்டு, பயனை, இலாபத்தை சிதறாமல் அனுபவிக்கும் இடமாக தொழில்துறை என,

மனித சமுதாயத்தின் முதுகெலும்பான் எல்லா துறைகளிலும் இக்கூட்டம் விரவி செல்லரித்திருப்பதால் பெரும்பான்மை ஏழ்மை சமூகம் செயலிழந்து நிற்கிறது.



நம்மைப்போன்றே, நம்நாட்டில் பிறந்த எண்பது சதவீத மக்கள், நமக்குள்ள அதே உரிமைகளை உடையவர்கள், அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு,



இந்த பணம் தின்னும் அதிபர்களும், அதில் பங்கு தின்னும் அரசியல் வியாதிகளும், அந்நிய முதலீடு என்ற போர்வையில் மிச்சமுள்ள வளங்களையும் மனித உழைப்பையும் சுரண்டிப்போக வந்திருக்கும் அயல் நாட்டுக் கம்பெனிகளும்,



நம்மையும், நம் வாழ்வாதாரங்களையும் கொள்ளையடித்து, மீண்டும் நம்மை பொருளாதார அடிமைகளாய் மாற்றிக்கொண்டிருப்பதை,

வேதனையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இதுதான் ஜனநாயகமா?

................... மேலும் தொடர்வேன் இதைப்பற்றி என் மனதில் நித்தம் ஏற்படும் யுத்ததின் பதிவுகளை.