Wednesday, February 25, 2009

க ரு கி ய க ன வு க ள்

கட்டுக்கதைகள்
பேசிக் கழித்து நம்
காலங்கள் போனதடா!

கண்ணைக் கட்டும்
மயக்கும் தீமைகள் சேர்ந்து
நம் கனவுகள் மாய்த்ததடா!

முட்டும் பகையை
மோதித் துரத்தும் நம்
வீரங்கள் வீழ்ந்ததடா!

பல வெட்டிப்பயல்கள்
சேர்க்கையில் நமது
தீரங்கள் தீய்ந்ததடா!

எட்டும் தொலைவினில்
எதிரினில் தென்பட்ட
எம் இலக்குகள் எரிந்ததடா!

அதைத் தட்டிப் பறித்து
தரையினில் வீசி
தரித்திரம் சிரித்ததடா!

பட்டும் பகட்டும்
பணமுடன் புகழும்
பிரித்தது சென்றதடா!

படைகட்டித் தீமை
பற்றி நம்முடை
நம்பிக்கை கொன்றதடா!

இவர்கள் கு ரூ பி க ள்

இனப்படுகொலை ஒவ்வொரு காலகட்டத்திலும், உலகில் ஏதெனும் ஓரிடத்தில் நடைபெற்று வந்திருக்கிறது.
காரணங்கள் எதுவாக இருப்பினும், மனதின் அடியில் ஏற்படும் காழ்ப்புணர்ச்சியே குரோதமாக உருவெடுத்து, ஓர் இனத்தையே வேரறுக்கும் வெறியினைத் தோற்றுவிக்கின்றது.
அச்செயலில் ஈடுபடும் மக்களோ, இராணுவமோ, அரக்கர்களாக மாறிவிடுகின்றனர்; அறிவு மறந்து, மிருகங்களாகின்றனர்.
ஆனால்,
தம் சுய ஆதாயத்திற்காகவும், குறுகிய, தனிமனித பழிவாங்கும் உத்தேசத்திற்காகவும்,
இத்தகைய கொடூரச் செயலை ஆதரித்தும், அந்த அரக்கர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவியளித்தும்,
அதில் திருப்தியடையும், அதில் ஆதாயம் தேடப்பார்க்கும்,
நம் தேசிய "அரசியல் வியாதிகள்";
இவர்கள்தான் உலகிலேயே காணச்சகியாத "" குரூபிகள் ""

Tuesday, February 24, 2009

எனது தொடக்கம் இங்கு மரணத்தில்.

ஆம். பிறப்பில் உயிர்களின் தொடக்கம். என் எழுத்துப் பிறப்போ என்னவர்களின் மரணத்தில் தொடங்குகிறது.


என்னவர்கள் என்றால், என் மொழி பேசுவதாலா?. என் இனம் என்பதாலா? இல்லை, என் உறவுகள் என்பதாலா?


இல்லை. என்னொத்த மனிதர்கள் என்பதால்.


எழுந்து,உண்டு, வேலைக்குச் சென்று, மனைவி, குழந்தைகளுடன் குலாவி மகிழ்ந்து, மீண்டும் உறங்கி என உலக மாந்தர் எல்லாம் இன்புற்று இருக்க,


விழிக்கும் போது, "இன்னும் உயிருடன் இருக்கிறோம்" என்றோ, "இன்னுமாஉயிருடன் இருக்கிறோம்" என்றோ விழிப்பதும், உறங்கப் போகும் முன் மரணத்தைஎதிர்பார்த்த படியே படுக்கச் செல்வதுமாய் நம்மொத்த மனிதர்கள்


நடுங்கிச் சாவதைப் பார்க்கையில்


நித்தம் என் மனதில் யுத்தம்.