Sunday, March 1, 2009

பி ண [ஜ ன] நா ய க ம்

தலைப்பே எதிர்மறை வார்த்தையாக தந்ததற்கு மன்னிக்கவும்.என்ன பொருள் இந்த சொல்லுக்கு? மக்கள் பிரதிநிதித்துவம்?

எங்கு இருக்கிறது மக்கள் பிரதிநிதித்துவம்? ஆட்சியிலா? அதிகாரத்திலா?

வெறும் வோட்டளிக்கும் உரிமை மட்டுமே பங்களிப்பாகிவிடுமா?

"மக்கள் ஆட்சியின் உண்மையான பயன் தான் என்ன?

ஏழ்மை விலகிவிட்டதா?, இல்லாமை இல்லாமல் போய்விட்டதா? கல்வி அறிவு பெருகிவிட்டதா? அல்லது இவை அனைத்தும் ஏற்படும் வழிகள்தான் நம் கண்களுக்குத் தட்டுப்பட்டு விட்டதா?"பொருளாதார வளர்ச்சி, தன்னிறைவு,அன்னியச்செலாவணி கையிருப்பு, பணவீக்கம் குறைவு,வெளிநாட்டு முதலீடு, தகவல்,தொலைத்தொடர்பு தொழில்நுட்பம், உலகமயமாக்கள், ..... . .. . .. " மாட்டுச்சாணம்! இவை அனைத்தும் இந்நாட்டில் பட்டினி கிடக்கும் பாமரனுக்கு ஒரு வேளை உணவிடவில்லை.எதைச் சொல்கிறோம் பொருளாதார வளர்ச்சி என்று? இதோ , பணம் பண்ணும் [திண்ணும்], பத்து சதவீத மேல்தட்டு மக்கள் இன்னும் கொழுத்துக்கொண்டிருப்பதையா? முதலீடு, கட்டமைப்பு, அதிகாரம் இவற்றைக் கைக்கொண்டு, உழைப்பவர்களின் வியர்வை முதல் இரத்தம் வரை உறிஞ்சி பணமாக்கிக் கொண்டிருக்கும் இந்த தொழிலதிபர்களின், அதிகார வர்க்கத்தின் செயல்களை நியாயப்படுத்தவும், பாதுகாப்பளிக்கவுமே பயன்படும் இந்த "ஜனநாயக பழைய பஞ்சாங்கம்."வலிவுள்ளதே வாழ தகுதியுள்ளது" என்பது இயற்கையின் நியதிதான். ஆனால் விலங்குகளுக்கு, மனிதனைத்தவிர மற்ற உயிரினங்களுக்கு.தன் அறிவால் மேம்பட்ட, அதனால் தன் இனத்தைத் தழைத்தோங்கச் செய்த மனித இனத்திலுமா அப்படி?அந்த மேம்பட்ட அறிவு, தன் இனத்தையே கொள்ளையிடவும், அழித்தொழிக்கவும், அடிமை செய்யவுமே உதவுமெனில்.... எதற்காக? தேவையில்லை.உழைக்க மறுக்கும், பிறரை ஏவல் செய்து வாழத்துடிக்கும், எல்லா நேரமும் இன்பம் மட்டுமே நுகரத்துடிக்கும் ஒரு கூட்டம் எல்லா காலகட்டத்திலும், எல்லா சமூகத்திலும் வாழ்ந்து வந்திருக்கிறது, வருகின்றது.பொதுவாழ்க்கை, நிர்வாகம், அரசமைப்பு, தொழிற்துறை, சட்டம், என இக்கூட்டம் பெருகி, ஊடுருவி, செல்லரித்து சமூகம் முழுதும் விரவியிட்ருக்கின்றது.எளிதில் பணம் பண்ணும் இடமாகிவிட்ட பொதுவாழ்க்கை, அதற்கு இடர் ஏதும் நேராவண்ணம் அதிகாரத்தைக் கைக்கொள்ள நிர்வாகம், இச்செயல்களை நியாயபடுத்தவும், இதுதான் வாழும்முறை, இதுதான் சமூகக்கட்டமைப்பு என்ற மாயத்தோற்றத்தை சட்டப்பூர்வமாக்கவும் தோதாக உருவாக்கப்பட்ட அரசமைப்பு, உழைப்பை, பொறுப்புகளை, கடமைகளை மட்டுமே பிரித்துக்கொடுத்துவிட்டு, பயனை, இலாபத்தை சிதறாமல் அனுபவிக்கும் இடமாக தொழில்துறை என,

மனித சமுதாயத்தின் முதுகெலும்பான் எல்லா துறைகளிலும் இக்கூட்டம் விரவி செல்லரித்திருப்பதால் பெரும்பான்மை ஏழ்மை சமூகம் செயலிழந்து நிற்கிறது.நம்மைப்போன்றே, நம்நாட்டில் பிறந்த எண்பது சதவீத மக்கள், நமக்குள்ள அதே உரிமைகளை உடையவர்கள், அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு,இந்த பணம் தின்னும் அதிபர்களும், அதில் பங்கு தின்னும் அரசியல் வியாதிகளும், அந்நிய முதலீடு என்ற போர்வையில் மிச்சமுள்ள வளங்களையும் மனித உழைப்பையும் சுரண்டிப்போக வந்திருக்கும் அயல் நாட்டுக் கம்பெனிகளும்,நம்மையும், நம் வாழ்வாதாரங்களையும் கொள்ளையடித்து, மீண்டும் நம்மை பொருளாதார அடிமைகளாய் மாற்றிக்கொண்டிருப்பதை,

வேதனையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இதுதான் ஜனநாயகமா?

................... மேலும் தொடர்வேன் இதைப்பற்றி என் மனதில் நித்தம் ஏற்படும் யுத்ததின் பதிவுகளை.

2 comments:

  1. அருமை. மிக அருமை. ஆரம்பமே நான் ரசிக்கும் உன் ஆவேசம். கீப் இட் அப்.

    ReplyDelete
  2. அருமை. மிக அருமை. ஆரம்பமே நான் ரசிக்கும் உன் ஆவேசம். கீப் இட் அப்.

    ReplyDelete