Thursday, March 12, 2009

வீ டி ழ ந் து . . ,

அந்த செய்தி என்னை பலமாகத் தாக்கியது. என் வீட்டை இடிக்கப் போகிறார்கள்.
வீட்டின் முன்புறமுள்ள சாலையை அகலபடுத்துவதற்காக , என் வீட்டையும் இடிக்கப் போகிறார்களாம். வெகு காலமாய் குடியிருந்தாலும் அவ்விடம் அரசுக்குச்சொந்தமான "புறம்போக்கு நிலம்" , எனவே எவ்வித இழப்பீடும் கிடையாதாம்.
யாருக்கு வேண்டும் இவர்களின் "இழப்பீடு"?. நான் பத்து மாதம் இருந்தது தாயின் கருவறை; பிறந்து இருபது வருடங்கள் இருந்தது என் வீடு.
கருவறையில் இருந்த காலங்கள் நினைவில் இல்லாதிருக்கலாம். ஆனால் என் வீட்டில் இருந்த காலங்கள்?
இன்று நான் என் குடும்பத்துடன் [ தாய், தந்தையுடன்] சென்னையில், வாடகை வீட்டில் இருக்கிறேன். ஆனால், என் மனதில் எங்களின் வீடும், மழைகாலத்தில் ஓட்டிலிருந்து கிளம்பும் ஈர மணமும் இன்றும் நிறைந்திருக்கின்றது.
வீடு எனப்படும் அந்த ஓர் அறை, முதலில் தென்னங்கீற்றால் வேயப்பட்ட ஒரு குடிலாகத்தான் இருந்தது. எதிர் வீட்டில் வளர்ந்து பெரிதாய் ஓங்கி நின்ற வேப்ப மரம், என் வீட்டிற்கு அளவில்லா குளுமையை வாரிவழங்கியிருந்தது.
பிறந்ததிலிருந்து நான் பாட்டி செல்லம். சூழ்ந்திருந்த ஏழ்மை, என்னை சீராட்டுவதைத் தடுக்க இயலவில்லை.
நான் தவழ்ந்து பற்றிய தண்ணீர் பானைகள், பிடித்து எழுந்து நின்ற என் அம்மாவின் தையல் மெஷின், வெளியே எட்டிப்பார்க்கும்போது பற்றிக் கொண்ட கதவின் நிலை, தன் ஓட்டைகளின் வழியே சூரிய ஒளியை காட்டி சிரிக்கச் செய்த கீற்றோலை, என் உடலையும் , மனதையும் குளுமையாய் வைத்திருந்த எதிர் வீட்டு வேப்பமரம். ......., அப்பப்பா, எப்படிச் சொல்வது?
இன்று பட்டணத்துப் பட்டு மெத்தைகளும், குளிர்சாதனப்பெட்டிகளும் தராத மகிழ்ச்சியை, நிம்மதியை, குதூகலத்தை அன்று அந்த ஓலைவேய்ந்த என் குடில் எனக்கு வழங்கியிருந்தது.
அப்பகுதி மக்களுக்கு செல்லப்பிள்ளையாக இருந்த சிறுவயதிலும், படிப்பில் சிறந்தவனாக விளங்கிய என் பள்ளிபருவத்திலும் , என் படிப்பிடமாய், ஓய்விடமாய், விளையாட்டு மைதானமாய், மனச்சோர்வுறும் நேரத்தில் அன்னை மடியாய் என்னுள் கலந்திருந்த என் வீடு என் இன்னொரு தாய்.
ஒழுக்கத்தில் கண்டிப்பும், படிக்க ஊக்கமும் தந்து, பண்பினையும், பரிவினையும் ஊட்டி வளர்த்த என் தாய் எனக்கு இன்னொரு வீடு.
படிக்க, உண்ண , உறங்க என எல்லாவற்றிற்கும் பாட்டியின் அருகாமையை தேடும் நான், பணிவானவனாய், பண்பானவனாய், முன்னேறும் வெறியுடையவனாய் வளர்ந்தது என் அம்மாவால்.
ஏழ்மையை எட்டி நிறுத்த, எந்நேரமும் என் வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கும் தையல்மெஷினின் ஓசை. உறங்கும் நேரத்திலும் என் தாயின் கால்கள் தன்னிச்சையாய் ஆடிக்கொண்டிருப்பதை பல சமயங்களில் பார்த்திருக்கிறேன்.
வெம்மை தாக்கும் கோடையில் குளுமை தரும் கீற்றோலை: அதே பரிவுடன் விசிறி விடும் என் அம்மா:
உலுக்கும் குளிர்காலத்தில் மெல்லிய கதகதப்பளிக்கும் கீற்றோலை; மேலும் கதகதப்பளிக்கும் என் அம்மாவின் நூல்சேலை;
வறுமையின் வெம்மை என்னை சுடாதவாறு பரிவு போர்வை போர்த்தியவர்கள் என் அம்மாவும், என் வீடும்;
பள்ளிபருவத்தில், மிகுந்த முயற்சிக்குப்பின் சற்று பணம் சேர்த்து, எங்கள் கூரை வீட்டை ஓட்டு வீடாக மாற்றும்போது, அதன் ஒவ்வொரு செங்கல்லும் நான் தொட்டு எடுத்துக்கொடுத்தது;ஒவ்வொரு ஓடும் நான் தூக்கிக்கொடுத்தது.
என் தாயின் ஒவ்வொரு முயற்சியும் எனக்காக வந்தது; ஒவ்வொரு சேமிப்பும் எனக்காகச் செய்யப்பட்டது.
அந்த வீட்டை இடிக்கப்போகிறார்கள். நினைக்கும் போதே என்னை துக்கம் சூழ்ந்தது. வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தேன்.
திடீரென அம்மா வயிறு மிகவும் வலிப்பதாய் சொன்னார்கள். அருகிலுள்ள மருத்துவமனைக்கு விரைந்தோம். பல்வேறு சோதனைகள் மேற்கொண்டார்கள்.
முடிவில் "கர்ப்பப்பை புற்றுநோய்" என்றார்கள். "பயப்படத்தேவையில்லை. ஆரம்பநிலைதான்! கர்ப்பப்பையை அகற்ற வேண்டும். பின் வேறேதும் அபாயம் இல்லை" என்றார்கள்.
"அந்த செய்தி என்னை பலமாகத் தாக்கியது."
என்னை திரும்பிப் பார்த்தபடி அம்மா டாக்டரிடம் கேட்டார். "என்றைக்கு ஆபரேஷன் செய்யலாம் டாக்டர்?"
" அடுத்த வாரம் வியாழக்கிழமை" டாக்டர் சொன்னார்; அன்றுதான் என் வீட்டையும் இடிக்கப்போகிறார்கள்.

2 comments:

  1. நெஞ்சைத் தொடும் முடிவு.

    நெஞ்சம் கனக்க வைத்துவிட்டாய்.

    ReplyDelete
  2. நண்பருக்கு வணக்கம்,

    போபால் தளத்தில் உங்கள் எண்ணங்களை வெளியிட விரும்புகிறேன். போபால் குறித்த உங்களின் எண்ணங்களை பதிவாக்கித் தருமாறு கோருகிறேன். விரைவில் கொடுப்பீர்கள் என எண்ணுகிறேன்.

    நன்றி,
    புலவன் புலிகேசி

    ReplyDelete